ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என திமுகவும், கூட்டணி கட்சிகளும் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திட்டமிட்டிருக்கின்றன. இதற்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளுநரை மாற்றம் செய்ய அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றார்.  இதனையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் மற்ற மாநில ஆளுநராக இருந்துகொண்டு தமிழக விவகாரம் குறித்து கருத்து கூறுவதை விமர்சிக்கும்விதமாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையில், ஆளுநர்களே; எரிமலையோடு விளையாடாதீர்கள்!’ என்ற தலைப்பில் , “தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயுள்ள பிரச்னையில் தமிழிசை, அவரது கூற்றுப்படி மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் முரசொலி கட்டுரைக்கு தற்போது தமிழிசை பதிலளித்திருக்கிறார். அவர் அளித்திருக்கும் பதிலில், “சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளே.. உங்கள் சாயம் வெளுக்கிறது என்ற பயமா? எனவேதான் எதைக் கண்டாலும் தினம் தினமும் அஞ்சும் தெனாலி திரைப்படக் கதாநாயகன் போல் நிழலுக்கும் அஞ்சி அஞ்சி அடிக்கடி ஆளுநரை பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறீர்கள்.

சீரியலிலும், சினிமாவிலும் நடித்துவிட்டு பதவியில் அமர்ந்திருப்பவர்களுக்குதான் கேமரா மேனியா மைக் மேனியா உள்ளது. உண்மையை உரக்கச் சொல்லும் எங்களுக்கு மைக் மேனியாவும் இல்லை கேமரா மேனியாவும் இல்லை. எங்களுக்கு மைக் மேனியா என்பதைவிட உங்களுக்குத்தான் மோடி போபியா எனவே இந்த பயத்தில் குளிர் ஜுரம் வந்து அடிக்கடி என்னைப்பற்றி கட்டுரை வருகிறது. தெலுங்கானாவில் என்ன நடக்கிறது என்பதை ஒழுங்காக முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள்.

தெலுங்கை பூர்வீகமாகக் கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி தமிழ் வேஷமிடும் தெலுங்கர்களுக்கு, தெலுங்கானாவின் ஆளுநராக இருந்தாலும் தெலுங்கானா சட்டமன்றத்தில் திருக்குறளை தமிழில் ஒலிக்கச் செய்த முழுமையான தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை உங்களால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.

நீங்கள் யார் என்னை தமிழகத்தில் கருத்து கூற முடியாது என்று சொல்வது. யார் அந்நியர் நீங்களா? நானா? கடந்த மூன்று ஆண்டுகள் தெலுங்கானா உள்ளூர் பத்திரிகைச் செய்திகளை ஆராய்ச்சி செய்து பார்த்தால் யார் நடுங்கிப் போயிருக்கிறார்கள் என்பது தெரியும். அங்கே தெலுங்கானா அரசை அலறவிடுவது யார் என்பதும் தெரியும். இதன் மூலம் உலகத் தமிழர்களுக்கு காப்புரிமை வாங்கிக் கொண்டதாக தம்பட்டம் கட்டிய, வீர வசனம் பேசிய உங்கள் சாயம் வெளுக்கிறது.அங்கே பண்ணை வீட்டில் நடக்கும் வாரிசு அரசியல் ஆட்சியை மக்கள் முன் தோலுரித்துக் காட்டியதால் ஆளுநர் மாளிகை மீது கோபம்.

தெலுங்கானாவில் மூன்று நாள் பாண்டிச்சேரியில் மூன்று நாள் என்று நேரம் ஒதுக்கி வழியில் தமிழ்நாட்டிலும் சில நிகழ்வுகளில் கலந்துகொண்டு பணியாற்றும் என்னை குறை காண வேண்டாம்.

மேலும் படிக்க | உண்டியல் குலுக்கியவர்கள் இப்போது விலை போய்விட்டார்கள் – கம்யூனிஸ்ட்டை சாடிய சி.வி.சண்முகம்

நான் பொதுவெளியில் வைக்கும் வாதங்களுக்கு பதில் விளக்கம் சொல்ல தெம்பும் திராணியும் அற்றவர்கள்தான் என்னைப் பற்றி கட்டுரை எழுதுகிறார்கள். குருவி தலையில் பனம் பழமா என்று கேட்டிருக்கிறீர்கள்? இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசு குருவிகள் அல்ல நாங்கள். பனை விதைகளாய் மண்ணில் புதைந்து தானே வளர்ந்து உருக்கேறிய பனை மரங்கள் நாங்கள்.

முரசொலியின் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். இடி ஒலியே எங்களை ஒண்ணும் செய்ய முடியாத போது. முரசொலி எங்களை என்ன செய்துவிட முடியும். வதந்திகளை பரப்பும் சிலந்திகள் நசுக்கப்படலாம். உண்மையாக உழைக்கும் சிங்கங்களை ஒன்றும் செய்து விட முடியாது. சிலந்திகள் சிங்கங்களை என்ன செய்து விட முடியும்” என தெரிவித்துள்ளார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link