இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வேலூர் மாவட்டம், மேல்மொனவூரில் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் சிறிதும் தரமற்றதாக இருப்பது அதிர்ச்சியையும், கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. நம்பிக்கையோடு நம்மை நாடி வந்த நம் இரத்தச் சொந்தங்கள் என்ற உணர்வு அணுவளவுமின்றி, வாழ வழியற்று வந்த அகதிகள்தானே என்ற அலட்சிய மனப்பான்மையே, தரமற்ற வீடுகளைக் கட்ட அனுமதித்ததற்கு முக்கியக் காரணமாகும். ஆடு, மாடுகளை அடைக்கும் பட்டிகளைவிட மிக மோசமான முறையில் குடியிருப்புகள் கட்டப்படுவதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் சிறிதும் மனச்சான்றற்ற கொடும்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

மேல்மொனவூர் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஈழச்சொந்தங்களுக்காக ‘முதலமைச்சர் இலவசத் தொகுப்பு வீடுகள்’ என்ற பெயரில் ரூ.11 கோடி ரூபாய் செலவில் 220 வீடுகள் கட்டும் திட்டத்தினை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். ஆனால், வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற கட்டுமான நிறுவனங்கள் வீடுகளை முற்றிலும் தரமற்ற முறையில் கட்டி வருவதாக முகாம்களில் வசிக்கும் மக்களே குற்றஞ்சாட்டினர். இதையடுத்து நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கே நேரடியாகச் சென்று மேற்கொண்ட கள ஆய்வில், அடித்தளம் ஆழமாக அமைக்கப்படாததும், சிமென்ட் கலவையில் அதிகளவு மலைமணல் கலக்கப்படுவதும், கான்கிரீட் தூண்கள் ஏதுமின்றிப் பாதுகாப்பற்ற வகையில் வீடுகள் கட்டப்படுகின்றன என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

மேலும் படிக்க | டிடிவி தினகரனுடன் கூட்டணியா?… ஜெயக்குமார் விளக்கம்

இது குறித்துத் தொடர்புடைய ஒப்பந்ததாரர்களிடம் நாம் தமிழர் கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கமளிக்காமல், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி, காவல்துறையினர் மூலம் கட்டுமான முறைகேடுகளை அம்பலப்படுத்திய நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களையே கைது செய்தது எதேச்சதிகாரபோக்கின் உச்சமாகும். முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடங்கப்பட்ட திட்டத்திலேயே ஊழல் புரியுமளவுக்கு மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ள கட்டுமான நிறுவனங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களின் முறைகேடுகளுக்குத் துணைபோகும் திமுக அரசின் செயல், கட்டுமான ஊழலில் ஆளுங்கட்சியினருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற ஐயத்தை ஈழத்தமிழ் சொந்தங்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

நாடு இழந்து, வீடு இழந்து, மண்ணையும், மக்களையும், ஊரையும், உறவுகளையும், உடைமைகளையும் இழந்து நிம்மதியாக உயிர்வாழ இந்தப் பூமிப் பந்தில் ஓர் இடம் கிடைத்திடாதா என்ற எதிர்பார்ப்புகளுடன், இன்னொரு தாய் நிலமான தமிழ்நாட்டிற்கு நம்மை நம்பி வந்த ஈழச்சொந்தங்கள், முகாம்கள் என்ற பெயரில் சிறையைவிடக் கொடுமையான எவ்வித அடிப்படை வசதியுமற்ற வதைக்கூடங்களில் ஒரு தலைமுறைக்கும் மேலாக வாடிவருகின்றனர். இந்த நாட்டிற்குச் சிறிதும் தொடர்பில்லாத திபெத்தியர்களுக்கு வளமான வாழ்வை இந்தியப் பெருநாடு அமைத்துக் கொடுத்துள்ளது. தமிழர்களுக்குச் சிறிதும் தொடர்பில்லாத ஐரோப்பிய நாடுகள்கூட ஈழத் தமிழ்ச்சொந்தங்களைத் தங்கள் சொந்த நாட்டுக் குடிமக்களைப்போல அரவணைத்து, ஆதரித்து வாழ வைக்கின்றன. ஆனால் தாய்த்தமிழகத்தைத் தங்கள் சொந்த வீடென நம்பி வந்த உறவுகளுக்கு, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு அரசு கட்டித் தரப்போவதாகக் கூறிய குடியிருப்புகளில் கூட ஊழல் புரிவதென்பது வெட்கக்கேடானதாகும்.

மேலும் படிக்க | திமுக இனிமேல் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாத ஓர் சூழலுக்கு தள்ளப்படும்: வி.சோமசுந்தரம்

ஆகவே, மேல்மொனவூரில் ஈழச்சொந்தங்களுக்குப் புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, உறுதிமிக்கத் தரமான வீடுகள் கட்டப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும், முறைகேடுகளில் ஈடுபட்ட கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்து, ஒப்பந்ததாரர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link