சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும். அதிமுக கட்சி விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது இன்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.  ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன்” எனக் கூறியுள்ளார். முன்னதாக இன்று அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. அதிமுக-வில் ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலராக தேர்வு செய்தது செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து, தமிழகம் முழுவதும் ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதுக்குறித்து பார்ப்போம். 

தர்மத்தை நம்பினேன்; மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன்; கழகத்தை உயிராக நேசிக்கும் கழகக் கண்மணிகளை, தொண்டர்களை நம்பினேன்; உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமார நம்பிய தமிழ்நாட்டு மக்களை நம்பினேன். இவையாவிற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆசிகளை நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது. அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது.

மேலும் படிக்க: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: கொண்டாடும் ஓபிஎஸ்…யோசனையில் ஈபிஎஸ்

அதிமுக கழக நிறுவனர் புரட்சித் தலைவர் அவர்கள் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி, கழகத்தின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திகழும், வெற்றி நடைபோடும் என்பது திண்ணம். 

“தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் 
ஓர்வழி நின்று நேர் வழி சென்றால் 
நாளை நமதே” 

என்னும் மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருமந்திரத்தை இதயப்பூர்வமாக ஏற்று, கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்றைக்கும் நம் இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன். கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும். 

– அண்ணா நாமம் வாழ்க! 

– புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! 

– புரட்சித் தலைவி அம்மா நாம் வாழ்க! 

என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: பட்டாசு வெடித்து கொண்டாடும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்; மவுனம் காக்கும் ஈபிஸ் தரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link