சென்னை: அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம், சென்னை அடையாரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்  சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து,செய்தியாளரை சந்தித்த அவர்,”இந்த சோதனை, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நடத்தப்படுகிறது.

இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை. ஏற்கனவே இதுபோன்று இரண்டு முறை சோதனை நடத்தினார்கள். ஆனால், அதில் எந்த ஆவணமும் கைப்பற்ற முடியாத நிலையில், இன்று மீண்டும் புதிதாக வழக்குகள் போடப்பட்டு, சோதனை என்ற பெயரிலேயே இந்த அரசு எதிர்க்கட்சிகளை அடக்கி, ஒடுக்கி ஒழிக்கலாம் என்றும் நினைக்கிறது” என்றார். 

ஆளத் தெரியாத முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், அவரது தந்தை எப்படி பழிவாங்கும் போக்கை தொடர்ந்தாரோ, அதைவிட ஒரு படி மேலாக சென்று இவர் நடந்து கொள்கிறார் என்றும் குற்றஞ்சாட்டினார். மேலும் பேசிய அவர்,”அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் போட்டு அடக்கிவிடலாம் என்று இந்த அரசு தப்பான கணக்கை போட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு திறன் இல்லாத திறமை இல்லாத ஸ்டாலின் அரசு, மக்களை திசை திருப்புவதற்காகவே இது போன்ற சோதனைகளை நடத்துகிறது.

மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இல்லத்தில் ரெய்டு

விஞ்ஞான ஊழில் திமுகவை மிஞ்ச ஆளில்லை

திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களிலேயே அனைத்து விலைவாசியும் உயர்ந்திருக்கிறது. 105 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் பாதிக்கப்படாமல் இருக்க மக்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து எடப்பாடி அரசு ஆட்சி நடத்தியது. ஆனால், கரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் திமுக அரசு, மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பால் விலை, கட்டுமான பொருள்களின் விலை, சொத்துவரி, மின் கட்டணம் ஆகியவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.

அடுத்து பஸ் கட்டண உயர்வு அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும், இதை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக முதலமைச்சர் தர இருக்கிறார் என்றும் அவர் கூறினார். அரசாங்கத்தின் அனைத்து அமைப்புகளையும் தனியாருக்கு தாரா வார்த்து கொடுக்கின்ற வகையில் முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும்  அவருடைய குடும்பத்தை சேர்ந்த நிறுவனங்கள் இன்றைக்கு கொள்ளை அடித்து, அனைத்தையும் பட்டா போட்டுக் கொண்டிருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார். மேலும், இன்றைக்கு விஞ்ஞான ரீதியாக கொள்ளையடிக்க உலகத்திலேயே திமுகவை வெல்ல ஆளே இல்லை என்றும் விமர்சனம் செய்தார்.

‘மத்திய அமைச்சர் மீது வழக்கு போட்டீர்களா…’

தொடர்ந்த அவர், “சுகாதாரத்துறை அமைச்சர் மீது வழக்கு போட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. ஒரு மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுத்தது முறையாக கொடுக்கவில்லை என்கிறார்கள். மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பது மாநில அரசாங்கம் இல்லை. வெறும் தடையில்லா சான்று கொடுப்பது மட்டும்தான் மாநில அரசின் கடமை. மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா தான் ஆய்வு செய்து முறையான அனுமதி கொடுக்கும். அப்படி என்றால், மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரை இந்த வழக்கில் சேர்த்துள்ளார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

“மேலும், தடையில்லா சான்று வழங்கியதற்காக உங்களுடைய அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா. உங்கள் அமைச்சர்களுக்கு எந்த நடைமுறையில் சான்று கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதே நடைமுறையில் தான் இவர்களுக்கும் சான்று அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் அவரையும் இந்த வழக்கில் சேர்த்தீர்களா?” என்றும் கேள்வி எழுப்பினார். 

மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

அமைச்சர்கள் வீட்டில் தொடரும் ரெய்டு

தேவையில்லாத காழ்ப்புணர்ச்சியில் இதுபோன்ற நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் மக்களுக்கு உங்கள் ஆட்சி மீது ஏற்பட்டிருக்கிற கோபத்தை திசை திருப்பதற்காகவே இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் ஆவேசமாக கூறினார். முன்னதாக, லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறும் இடத்திற்கு வந்த சி.வி சண்முகம், உள்ளே செல்ல முயன்றபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடக்கும் சோதனைகள் பழிவாங்கும் நடவடிக்கைகள்: ஆர்.பி.உதயகுமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link