தங்க கவசத்தை எடுத்துச் செல்லும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்க கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “விடுதலைப் போராட்ட வீரரான முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு 2014ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் ஆகியோரின் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளை முன்னிட்டு 3 தினங்களுக்கு முன்பாக தங்க கவசத்தினை வங்கியில் இருந்து எடுத்துச் சென்று பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவித்து, மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம்.

எங்களுக்கே அதிகாரம் – இபிஎஸ் தரப்பு

இதற்காக அதிமுக பொருளாளரும் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்திட்டு தங்க கவசத்தினை பெற்று செல்வார்கள். தற்போது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தினை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் வெடிகுண்டு தயாரிப்பு – அதிர்ச்சி கிளப்பும் ஓபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவு செல்லும் என உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, அதிமுக பொருளாளராக உள்ள எனக்கே தங்க கவசத்தினை வங்கியில் இருந்து பெறுவதற்கான அதிகாரம் உள்ளது.

ஆனால், வங்கி அதிகாரிகள் தங்க கவசத்தினை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகவே, 2022 அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாளை முன்னிட்டு தங்க கவசத்தினை எடுத்துச் செல்ல சட்டபூர்வமாக இடைக்கால உத்தரவு வழங்கவும், வங்கி கணக்கை அதிமுக சார்பாக கையாளும் அதிகாரத்தை வழங்கவும் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.” என கூறியிருந்தார்.

ஆட்சியரிடம் ஒப்படையுங்கள் – ஓபிஎஸ் தரப்பு 

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, வங்கி தரப்பிலும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயம் தரப்பிலும் நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படுவதாக தெரிவித்திருந்தனர். வழக்கில் ஒ.பன்னீர் செல்வம் தரப்பை வழக்கில் இணைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு தங்க கவசத்தை ஒப்படைக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மனு இன்று (அக். 26) மீண்டும் நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓபிஎஸ் தரப்பில், “அதிமுக கட்சி விதிமுறைகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருக்கும்போது தற்காலிக பொருளாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை. 

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலர் நியமனம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. தங்க கவசத்தை எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் வசம் ஒப்படைக்க வேண்டும்”  என வாதிடப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில்,”அதிமுகவில் 2,190 உறுப்பினர்கள் இணைந்து இடைக்கால பொதுச்செயலரை தேர்வு செய்துள்ளனர். உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இடைக்கால பொதுச்செயலர் தேர்வு செல்லும் என கூறியுள்ளது. மேலும் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு தங்க கவசத்தை பெற எந்த அதிகாரமும் இல்லை. எனவே, சட்டத்தின்படி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது

கவசத்தை பெற்றுக்கொண்ட மதுரை டிஆர்ஓ

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தங்கக்கவசத்தை எடுத்துச் செல்லும் அதிகாரத்தை ராமநாதபுரம் DRO-வுக்கு வழங்கி உத்தரவிட்டது. மேலும், அவரது பொறுப்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து சென்று அணிவித்து, மீண்டும் வங்கியில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அதற்கு ராமநாதபுரம் காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவு இந்த ஆண்டிற்கு மட்டுமே எனவும் உத்தரவில் கூறியுள்ளார்.

அந்த வகையில், ராமநாதபுரம் DRO விடுமுறையில் சென்றிருப்பதால், மதுரை DRO தங்க கவசத்தை பொறுப்பேற்று, தங்க கவசத்தை இன்று மாலை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தமிழகத்தில் துணை வேந்தர் நியமன சர்ச்சை: விளக்கம் அளிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link