கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். 

காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. 

பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. 

மேலும் படிக்க | கோவை வெடிவிபத்து : பன்னாட்டு தொடர்புக்கு வாய்ப்பு… ஏன்ஐஏ விசாரணைக்கு மாற்ற ஸ்டாலின் பரிந்துரை

இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். 

இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பரிந்துரையை இன்று நடந்த இந்த விவகாரம் தொடர்பான ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.   

தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா, எஸ்.பி. ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர். பந்தயசாலை பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் காவல் துறை அதிகாரிகளிடம் இந்த வழக்கு தொடர்பான விபரங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கேட்டறிந்தனர். 

இதனிடையே கோவை உக்கடம் பகுதியில் உள்ள வின்செண்ட் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான் (28) என்பரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள அவரது வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். 

அப்சர்கானை விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அவரது வீட்டில் நடத்திய சோதனையில், ஒரு மடிக்கணினியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

கேட்பாற்று கிடக்கும் கார்கள் பறிமுதல் 

கோவை வெடிவிபத்து சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள் குறித்து மாநகர போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் முக்கிய பகுதிகளில் கேட்பாரற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் சாலையோரங்களில் நிற்கும் கார்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இன்று போக்குவரத்து போலீசார் உக்கடம் வின்செண்ட் சாலையோரத்தில் கேட்பாரற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த 7 கார்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | சொத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தாயைத் கொலை செய்த மகன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link