கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் இரண்டாவது மகன் 20 வயது கொண்ட அற்புதராஜ். இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில் விருத்தாச்சலம் காய்கறி சந்தையில் வேலை செய்து வருகிறார். 

இதேபோல் விருத்தாச்சலம் அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை- லதா தம்பதியினரின் ஒரே மகள் 18 வயது கொண்ட சக்தி. ஏழுமலை இறந்த பின்பு, தனது ஒரே மகளுடன், தாய் லதா, விருத்தாச்சலம் பெரியார் நகரில் வீடு கட்டி வாழ்ந்து வந்தனர். பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்கும் சக்தி, கடந்த கொரோனா கால கட்டத்தின் போது, விருத்தாச்சலம் பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் வேலைக்குச் சென்றுள்ளார். 

அப்போது அதே பேக்கரியில் அற்புதராஜும் வேலை செய்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடன், கடந்த ஏழு மாதத்துக்கு முன்பு, இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி, ஓடிச்சென்று காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

திருமணம் முடிந்த பின்பு, சக்தியின் வீடான விருத்தாச்சலம் பெரியார் நகரில் உள்ள தனது தாய் லதா வீட்டில், தனது காதல் கணவனுடன் ஒன்றாக வசித்து வந்தார். சக்தி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு, நேற்று மதியம்  அற்புதராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். 

பின்னர் மீண்டும் வேலைக்குச் சென்றுள்ளார். தனது மருமகன் அற்புதராஜ் சென்ற பின்பு, வீட்டிற்குள் நுழைந்த சக்தியின் தாயார் லதா, தனது மகள் உடல் அசைவு இல்லாத நிலையில் படுத்திருப்பதைக் கண்டு பதறியுள்ளார்.

சக்தியின் தாயாரின் அழுகுறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது சக்தி உயிரிழந்து கிடந்துள்ளார். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் படிக்க | திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்பு; கல்வித் தகுதி இதுதான் – உடனே விண்ணப்பியுங்கள்

இதுகுறித்து சக்தியின் கணவரான அற்புதராஜை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனக்கு எதுவும் தெரியாதது போல் அற்புதராஜ் நாடகம் ஆடியுள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில், தனது மனைவியை அடித்து கொன்றதாக அற்புதராஜ் ஒப்புக் கொண்டுள்ளார்.

7 மாத கர்ப்பிணியாக உள்ள தனது மனைவி, அடிக்கடி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கூறி வந்ததாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம், சண்டைகள் ஏற்பட்டதாகவும் அற்புதராஜ் தெரிவித்தார். மேலும், அவ்வாறு நடைபெற்ற சண்டையில் ஆத்திரமடைந்த அற்புதராஜ் தனது கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றது தெரிய வந்தது. 

இது குறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன சக்தி, தனது வீட்டில் உள்ள கதவுகள், சுவர்களில் தனது அம்மா மீதும், தனது காதல் கணவர் மீதும் கொண்டுள்ள பாசத்தை எழுதி வைத்துள்ளார். ஐ லவ் யு அம்மா, true lovers என கணவர் மற்றும் அம்மா பேரை வீடு முழுவதும் எழுதி வைத்துள்ளார். 

அது மட்டுமில்லாமல், அவரது வீட்டின் கதவில்,
அம்மா உன்ன நான் புரிஞ்சுக்காம போயிட்டேன்.
உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா.
உன்ன என்னால மறக்க முடியாது அம்மா.
நீ எனக்காக நல்லா இருக்கணும் அம்மா.

-என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

வீடு முழுவதும் தனது அம்மா மற்றும் தனது கணவன் மீது கொண்ட பாசத்தை தனது எழுத்துக்களால் பதிவு செய்திருக்கும் சக்தியின் குழந்தைத்தனமான பாசத்தை புரிந்து கொள்ளாமல், காதல் கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிப் பருவ காலகட்டத்தில், காதல் வயப்பட்டு திருமணம் வரை செல்லும் குழந்தைகளின் விளையாட்டு சண்டை கூட விபரீதத்தில் முடிந்து விடும் என்பதற்கு இச்சம்பவமே சாட்சி.

மேலும் படிக்க | பஞ்சாப் வங்கியின் முக்கிய அறிவிப்பு; செப்டம்பர் 1 முதல் உங்கள் கணக்கு மூடப்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link